12 August 2015

 

பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்குகிறது.

        தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர் பணியிட மாறுதல் தொடர்பான இணையவழிக் கலந்தாய்வு மே மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு மே மாதம் பணியிட மாறுதல் தொடர்பான கலந்தாய்வு நடைபெறுவதன் மூலம், அந்தக் கல்வியாண்டில், கலந்தாய்வில் தேர்வு செய்யும் பள்ளிகளுக்குச் செல்வது எளிது. மேலும்
அந்தக் கல்வி ஆண்டுக்கான பாடத்தையும் மாணவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்து ஒரே மாதிரியான முறையில் கற்பிக்க முடியும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களிடம் ஒருங்கிணைப்பு ஏற்படும். மாணவர்களின் திறன் அறிந்து அவர்களுக்கு தகுந்தவாறு பாடங்களை தெளிவாக நடத்தவும் முடியும்.

ஆனால் இந்த ஆண்டு மே மாதத்தில் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கானக் கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல், பதவி உயர்வுகளுக்கான கலந்தாய்வு இணைப்பில் உள்ள கால அட்டவணைப்படி நடைபெற உள்ளது. எனவே மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற உள்ள ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்குகிறது.
இதில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட நாள்களில் காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் முதன்மைக் கல்வி அலுவலகம் இயங்கும் பி.எஸ். சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு வர வேண்டும்.
பள்ளிக் கல்வித் துறை 2015 - 2016-ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு குறித்த விவரம்: 12-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு, 14-ஆம் தேதி அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும். 16-ஆம் தேதி அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கானக் கலந்தாய்வு நடைபெறும்.
18-ஆம் தேதி அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும், 22, 23-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வும், 23-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும், 24-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறும்.
24-ஆம் தேதி முதுகலை ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்வது தொடர்பான கலந்தாய்வும் (55 நபர்கள் மட்டும்), பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு 26-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையிலும் நடைபெறும்.
12-ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல் தொடர்பான கலந்தாய்வும், 16-ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும் நடைபெற உள்ளன.












அனைவருக்கும் கல்வி இயக்கக (எஸ்.எஸ்.ஏ.,) கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் கலைக்கப்பட்டுள்ளது. திட்டத்தை நிறுத்தப் போவதற்கான அறிகுறியே இது என்கின்றனர் பணியாளர்கள்.

பள்ளி வயதுள்ள அனைத்து குழந்தைகளும், கட்டாயம் ஆரம்பக் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு, கடந்த, 2002ல், அனைவருக்கும் கல்வி இயக்ககத்தை (எஸ்.எஸ்.ஏ.,) ஏற்படுத்தியது. மத்திய அரசு, 65 சதவீதம், மாநில அரசு, 35 சதவீதம் நிதி ஒதுக்கீடு வழங்கி வருகின்றன.


மாவட்டந்தோறும் எஸ்.எஸ்.ஏ., கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், எஸ்.எஸ்.ஏ., கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் கலைக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே நிரந்தரமாக அப்பணிகளை கவனிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

எஸ்.எஸ்.ஏ., வட்டாரங்கள் கூறுகையில், 2002ல் துவக்கப்பட்ட எஸ்.எஸ்.ஏ., திட்டம், கலைக்கப்படும் என்ற பேச்சு எழத் துவங்கியுள்ளது. அதன் விளைவாக தான், எஸ்.எஸ்.ஏ., கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள் கலைக்கப்பட்டுள்ளன. இனி கல்வித்துறை மற்றும் எஸ்.எஸ்.ஏ., ஆகிய இரு பணிகளையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே கவனிக்க வேண்டும் என்பதால், பணிகளில் தொய்வு ஏற்படலாம் என்றன.

No comments:

Post a Comment