08 September 2015

Posted: 06 Sep 2015 05:55 PM PDT
முன்னாள் ராணுவத்தினரின் 42 ஆண்டு கால (1973-2015) கோரிக்கையான 'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை நேற்று மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

இதன் 42 ஆண்டு கால பின்னணி:
*கடந்த 1973ல் 3வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி அப்போதைய பிரதமர் இந்திரா, 'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' முறையை ரத்து செய்தார். இதே ஆண்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ராணுவத்தினர் கடைசியாக பெற்ற சம்பளத்தின் அடிப்படையிலான ஓய்வூதியம் 70ல் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டது.

* 1986ல் நான்காவது சம்பள கமிஷன் ரணுவத்தினரின் ஓய்வூதிய கோரிக்கையை நிராகரித்தது
* 1991ல் சரத் பவார் கமிட்டியும் மறுத்தது. ஒரு முறை மட்டும் ஓய்வூதியத்தை உயர்த்த அனுமதி அளித்தது.
* 1996ல் ஐந்தாவது சம்பள கமிஷனும் முன்னாள் ராணுவத்தினரின் கோரிக்கையை ஏற்க மறுத்தது.
* 2002ல் காங்., தேர்தல் அறிக்கையில் ஓய்வூதிய கோரிக்கையை சேர்க்குமாறு சோனியா கேட்டுக் கொண்டார்.
* 2006ல் ஆறாவது சம்பள கமிஷனும் கோரிக்கையை நிராகரிக்க, முன்னாள் ராணுவத்தினர் வெளிப்படையாக போராட துவங்கினர்.
* 2008ல் டில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் முன்னாள் வீரர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். தங்களது பதக்கங்கள், விருதுகளை அரசிடம் திரும்ப அளிக்க முடிவு செய்தனர். இதனை அரசு கண்டு கொள்ளவில்லை.
* 2009ல் முன்னாள் வீரர்களை சந்திக்க அப்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மறுத்தார். இதையடுத்து பதக்கம், விருதுகளை ஜனாதிபதி மாளிகை ஊழியரிடம் ஒப்படைத்தனர்.
* 2011ல் ராணுவத்தினரின் ஓய்வூதிய கோரிக்கை ராஜ்ய சபா கமிட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டது.
* ஆண்டுக்கு 8,000 கோடி முதல் 9,000 கோடி ரூபாய் வரை தேவைப்படும். இதற்கான நிதி ஆதாரம் இல்லை என்று கூறி அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.

* 2013ல் அரியானாவில் உள்ள ரேவரியில் நடந்த முன்னாள் ராணுவத்தினரின் பிரமாண்ட ஊர்வலத்தில் பங்கேற்ற நரேந்திர மோடி, ஓய்வூதிய கோரிக்கைக்கு ஆதரவு அளித்தார்.
* மோடி தலைகாட்டியதும் ஐ.மு., அரசு விழித்துக் கொண்டது. ஏப்ரல், 2014ல் இருந்து ஓய்வூதிய முறை அமல்படுத்தப்படும் என அறிவித்தது. இதற்காக ரூ. 500 கோடியை ஒதுக்கீடு செய்தது.
* மத்தியில் பா.ஜ., அரசு 2014ல் பதவி ஏற்ற பின்னரும் இழுபறி நீடித்தது. ஆனாலும் பிரதமர் மோடி மட்டும் ஓய்வூதிய முறையை அமல்படுத்துவதில் உறுதியாக இருந்தார்.
* கடந்த ஜூனில் 'ஜந்தர் மந்தர்' பகுதியில் மீண்டும் முன்னாள் வீரர்கள் போராட்டத்தில் குதிக்க, அரசுக்கு நிர்ப்பந்தம் அதிகரித்தது.
* 2015, செப்.,5ல் முன்னாள் ராணுவ வீரர்களின் 'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை ஏற்பதாக மத்திய அரசு அறிவித்தது.

Posted: 06 Sep 2015 05:54 PM PDT
டி.என்.பி.எஸ்சி  நேர்முகத் தேர்வு அல்லாத குரூப் 2 பணியிடம் 1700 பணியிடங்களும் வீஏஓ 800 பணியிடங்களும் குரூப் 4 2800 பணியிடங்களுக்கும் இம்மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகிறது. இதில்

Group 2 A (non Interview) பணியிடத்திற்கு பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும் 18 வயது பூர்த்தி அடைந்திருகக வேண்டும்


Group 4 (இளநிலை உதவியாளர், தட்டச்சர்) பணியிடத்திற்கு 10 ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் 18 வயது நிரம்பி இருத்தல் வேண்டும்.

VAO பணியிடத்திற்கு 10 வகுப்பு படித்திருக்க வேண்டும் 21 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டபடிப்பு படித்த இடஒதுக்கீட்டு பிரிவினர்க்குவயது வரம்பு  தளர்வு உண்டு.....

மேற்காணும் அனைத்து பணியிடங்களுக்கும் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள தமிழக அரசின் சமச்சீர் கல்வி மற்றும் 11 ,12  பள்ளி பாடபுத்தகத்தில் இருந்தே கேள்விகள் அதிக அளவில் வரும்.
Posted: 06 Sep 2015 05:52 PM PDT
தமிழ்ப் பாடப்புத்தகங்களுடன் ஆசிரியர்களுக்கான "கையேடும்' தயாரிக்கவேண்டுமென, அரசின் தமிழ் இணையக் கல்வி கழகத்திற்கு கல்வியாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

தமிழ்மொழி, கணித்தமிழை மேம்படுத்த தமிழ் இணையக் கல்விக்கழகம் பல நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சமீபத்தில் பல்கலை பேராசிரியர்கள், தமிழறிஞர்கள் "சாப்ட்வேர்'
நிறுவனத்தினர் சென்னையில் ஒன்றுகூடி ஆலோசித்தனர். அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் தமிழ்மொழி ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கென தனித்தனி பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். அயல்நாட்டில் வசிப்போருக்கு வசதியாக கம்ப்யூட்டர் வழி "தமிழ் பயிற்சி அளிக்கும் திட்டத்தை' செயல்படுத்த வேண்டும். பேச்சு தமிழுக்கான பாடங்களை எழுதும்போது ஜாதிய வழக்குகள் தவிர்க்கப்பட வேண்டும்.

பல்வேறு மொழிச் சூழல்களில் தமிழ் கற்போர் இழைக்கும் மொழிப் பிழைகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கற்றல், கற்பித்தல் முறைகளை அறிய ஆசிரியர்களுக்கு சிறிய நூல்களை உருவாக்க வேண்டும். தமிழ் பாடப்புத்தகங்களுடன் ஆசிரியர்களுக்கான "கையேடுகளை' உருவாக்க வேண்டும். தமிழ்மொழி இலக்கணத்தை கற்போரின் தாய்மொழியில் வடிவமைக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை கல்வியாளர்கள் அளித்துள்ளனர். இதனை தமிழ் இணையக் கல்வி கழகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
Posted: 06 Sep 2015 05:51 PM PDT
இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ள, பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புக்கான, முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. யோகா, 'ப்ளே ஸ்கூல்' மற்றும் பால்வாடி கல்விக்கு தனி பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.பி.எட்., - எம்.எட்., போன்ற கல்வியியல் பயிற்சி படிப்புகள், இதுவரை, ஓராண்டு பட்டப்படிப்பாக இருந்தன. இந்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டு படிப்புகளாக மாற்றி, மத்திய அரசின் தேசிய கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.


இதை எதிர்த்து, தமிழகத்தில், சுயநிதி கல்லுாரிகள் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை, நவ., 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை, தமிழக அரசு துவங்கியுள்ளது. அத்துடன், முதலாம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தையும் வெளியிட்டுள்ளது.

அதில், யோகா உட்பட, மூன்று கட்டாயப் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. மீதமுள்ள, 33 பாடங்களில், தமிழ், ஆங்கிலம், உயிரியல், அமைதி மற்றும் சுற்றுச்சூழல், கணிதம், கணினி அறிவியல், 'ப்ளே ஸ்கூல்' கல்வி போன்ற படிப்புகள் இடம் பெற்றுள்ளன. கணினி அறிவியலில், புதிதாக, மூன்று செயலிகள் (ஆப்) கண்டுபிடிப்பது, செய்முறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இன்ஜி., பட்டதாரிகள் ஆர்வம்!தமிழகம் முழுவதும், 21 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், பி.எட்., படிப்பில் சேர, விண்ணப்பம் வழங்கப்படுகிறது. பி.இ., படித்தவர்கள், 200 பேர் ஆர்வமாக விண்ணப்பம் வாங்கியுள்ளனர்.வரும், 10ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 11ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர முறை கவுன்சிலிங், 28ம் தேதி நடக்க உள்ளது.

பி.இ., - பி.டெக்., பட்டம் பெற்றவர்களும், பி.எட்., படிப்பில் சேரலாம் என, சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Posted: 06 Sep 2015 05:50 PM PDT
ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் இடஒதுக்கீடு வழங்காமல் ஆசிரியர்களை தேர்வு செய்வது அரசியல் சட்டத்தை மீறுவதாகும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

தடைவேண்டும்

சென்னை ஐகோர்ட்டில், முரளிதரன் என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், ‘சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் இயக்குனராக பாஸ்கர் ராமமூர்த்தி உள்ளார். இவரை அப்பதவியில் இருந்து நீக்கக்கோரி வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்துக்கு ஆசிரியர் பணிக்கான தேர்வு நடவடிக்கைகளை இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி மேற்கொண்டு வருகிறார்.
  
அவரை இயக்குனராக நியமித்ததை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அவர் ஆசிரியர் பதவிக்கான தேர்வை நடத்த முடியாது. மேலும், இந்த ஆசிரியர் தேர்வு, இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் நடைபெறுகிறது. எனவே, இந்த தேர்வுக்கு தடைவிதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

தடை முடியாது

இந்த வழக்கில், இடைக்கால தடைகேட்டு தொடரப்பட்ட மனுவை நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், ‘ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தியை பதவி நீக்கம் செய்யக்கோரிய வழக்கின் வாதத்தை விரைவாக நடத்த தயாராக உள்ளதாக, இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி சார்பில் ஆஜரான வக்கீல் கூறினார். எனவே, இந்த சூழ்நிலையில், ஆசிரியர் தேர்வுக்கு தடைவிதிக்க தேவையில் இல்லை என்று கருதுகிறேன்.

மேலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்களுக்கு இடஒதுக்கீடு வழங்காமல், ஆசிரியர் தேர்வை ஐ.ஐ.டி. இயக்குனர் மேற்கொள்வது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும். அதனால், இந்த ஆசிரியர் தேர்வு, இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரதான வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. இந்த இடைக்கால மனுவை முடித்து வைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
Posted: 06 Sep 2015 05:49 PM PDT
கல்விச் சுற்றுலா, தொழிற்சாலை பார்வையிடல், மற்றும் களப் பயிற்சிக்கு செல்லும் மாணவர் களுக்கு கட்டாயம் விபத்து காப்பீடு எடுக்க வேண்டும் என்று அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும் ஏஐசிடிஇ புதிய கட்டுப்பாடு விதித் துள்ளது.

பொறியியல் மற்றும் தொழில் நுட்ப படிப்பு படிக்கும் மாணவர்கள் தங்கள் பாடம் சம்பந்தமாக நேரடி அனுபவம் மற்றும் களப்பயிற்சி பெறுவதற்காக கல்விச்சுற்றுலா, தொழிற்சாலை
பார்வையிடல் போன்றவற்றுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இதன்மூலம் மாணவர்கள் தங்கள் துறையில் நேரடி அனுபவம் பெறுகின்றனர்.

இந்நிலையில், கல்விச் சுற்றுலா, தொழிற்சாலை பார்வையிடல், களப்பயிற்சி போன்றவற்றுக்கு அழைத்துச் செல்லப்படும் தொழில் நுட்ப கல்வி மாணவர்களின் பாது காப்பை உறுதிசெய்திடும் வகை யில் அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) பொறியியல் மற்றும் தொழில்நுட் பக் கல்லூரிகளுக்கு புதிய விதி முறைகளை கொண்டுவந்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வரு மாறு:-

* மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் செல் போன் எண் அடங்கிய பாதுகாப்பு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.

* ஒவ்வொரு மாணவருக்கும் உடன் செல்லும் ஆசிரியர்களுக்கும் உரிய விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு எடுக்கப்பட் டிருக்க வேண்டும். காப்பீட்டுச் செலவுகளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

* மாணவிகள் செல்வதாக இருந் தால் அவர்களின் துணைக்கு கட்டாயம் ஒரு ஆசிரியை உடன் செல்ல வேண்டும்.

* அனைத்து மாணவர்களுக்கும் அங்கீகாரம் பெற்ற டாக்டரி டம் இருந்து மருத்துவ தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண் டும்.

* மாணவர்களின் பாதுகாப்புக்கு உடன் செல்லும் ஆசிரியர்கள் பொறுப்பேற்று உறுதியளிக்க வேண்டும். அத்துடன் மாணவர் களுக்கு ஏதேனும் நேரிட்டால் பொறுப்பேற்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

* மாணவர்களுக்கும் ஆசிரியர் களுக்கும் மேற்கொள்ளவுள்ள நிகழ்ச்சி குறித்து முன்கூட்டியே ஒரு அறிமுகப்பயிற்சிக்கு ஏற் பாடு செய்யலாம். வெளியில் செல்லும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கலாம்.

* மாணவர்களுடன் செல்லும் பொறுப்பு ஆசிரியர்கள், ஒவ் வொரு மாணவரின் உடல்நலனை யும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

* வெளியில் செல்லும்போது நீச்சல், படகு சவாரி போன்ற வற்றில் ஈடுபடுவதாக இருந் தால், கண்டிப்பாக ஒரு மேற் பார்வையாளர் அல்லது பாதுகாவ லர் உடன் இருக்க வேண்டும்.

மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை பின்பற்றாமல் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏஐசிடிஇ எச்சரிக்கை விடுத்துள்ளது.

கல்விச்சுற்றுலா, தொழிற் சாலை பார்வையிடல் போன்றவற் றுக்காக மாணவர்களை அழைத்துச் செல்லும்போது ஏஐசிடிஇ வரை யறை செய்துள்ள பாதுகாப்பு வழி காட்டு நெறிமுறைகளை கண்டிப் பாக பின்பற்றுமாறு அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்திருப்பதாக மாநில தொழில்நுட்பக் கல்வி இயக் குநர் எஸ்.மதுமதி தெரிவித்தார்.
Posted: 06 Sep 2015 05:49 PM PDT
மாணவர்களை, நீர்நிலைகள் அருகே செல்ல அனுமதிக்கக் கூடாது; கடலில் குளிக்க விடக்கூடாது என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக, அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளி வளாகங்களை, குப்பை, கூளங்கள், புதர்கள், தேவையற்ற செடிகள் இன்றி சுத்தமாக பாதுகாக்க வேண்டும். மாணவ, மாணவியரை, குளம், குட்டை மற்றும் நீர்நிலைகள் அருகே செல்ல அனுமதிக்கக் கூடாது; கடல் அருகில் இருந்தால், அங்கு குளிக்க விடக்கூடாது.

பள்ளி வளாகத்தில் உயர்மின் அழுத்தக் கம்பி இருந்தால், அதை பத்திரமாக அகற்ற வேண்டும். பள்ளியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டி, கழிவுநீர்த் தொட்டி மற்றும் குடிநீர்த் தொட்டி போன்றவை மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன், ஒவ்வொரு பள்ளியிலும், கண்டிப்பாக முதலுதவி பெட்டி இருக்க வேண்டும். இதுதவிர, மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான, மற்ற பல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment