Posted: 16 Aug 2015 07:51 PM PDT
அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. மாதந்தோறும் ரூ.பல லட்சம் சம்பளம் வழங்கப்பட்டு வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.கிராம மற்றும் நகர பகுதிகளில் அரசு தொடக்க, நடுநிலை பள்ளி களை போன்று உதவி பெறும் பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தொடக்க பள்ளிகளில் ஒன்று முதல் 60 மாணவர்கள் இருந்தால் 2 ஆசிரியர், 61 முதல் 90 வரை மூன்று, 91 முதல் 120 வரை 4 பணியிடம், 121 முதல் 200 வரை 5 பணியிடமும், அதன்பிறகு ஒவ்வொரு 50 மாணவர்களுக்கும் ஒரு கூடுதல் பணியிடம் என வரையறை செய்யப்பட்டுள்ளது.
நடுநிலை பள்ளிகளை பொறுத்தவரை இதே நடைமுறை தான் என்றாலும், அறிவியல் மற்றும் கணிதம், சமூக அறிவியல், மொழிப்பாடம் ஆகியவற்றுக்கு 35 மாணவர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் ஆசிரியர் நியமிக்கப் பட்டு வருகின்றனர்.
100 மாணவர்கள் வரை மூன்று தனிப் பாட ஆசிரியரும் அதற்கு மேல் 35 மாணவருக்கு ஒரு ஆசிரியர் கூடுதலாக பணியமர்த்தலாம். உதவி பெறும் பள்ளிகளிலும் இதே நடைமுறை தான் பின்பற்றப் படுகிறது.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது. இதனால் ஆசிரியர் பணியிடம் உபரி அதிகரித்து கொண்டே வருகிறது. அரசு பள்ளியில் உபரியாக இருக்கும் ஆசிரியர்கள் மாணவர் அதிகம் இருக்கும் பள்ளிக்கு ஆண்டுதோறும் கவுன்சிலிங் மூலம் மாற்றப் படுகின்றனர். ஆனால், உதவி பெறும் பள்ளிகளுக் கிடையேயான பணி நிரவல் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுக்கும் மேல் நடத்தப் படவில்லை.
இதனால் ஒவ்வொரு பள்ளியிலும் உபரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், காரைக்குடியில் உள்ள ஒரு உதவி பெறும் பள்ளியில் மட்டும் 12 உபரி பணியிடங்கள் உள்ளன. இந்த பள்ளிக்கு உபரி சம்பளமாக மாதந்தோறும் ரூ.ஒரு லட்சத்து 93 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு ஒன்றியத்திலும் உபரி சம்பளமாக மாதந்தோறும் லட்சக்கணக்கில் வழங்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உபரியாக உள்ள 256 பணி யிடங்களுக்கு 43 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது, என தெரிய வந்துள்ளது. இதன் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ.30 லட்சம் முதல் 50 லட்சம் வரை உபரி சம்பளம் வழங்கப் பட்டு வருகிறது.
பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறும்போது: அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆசிரியர்கள் அப்படியே உள்ளனர்.
மாணவர்கள் இன்றி சும்மாவே காலம் கடத்தும் நிலை உள்ளது. ஏழு ஆண்டுக்கும் மேலாக சிவகங்கை மாவட்டத்தில் பணி நிரவல் இல்லை. உதவி பெறும் பள்ளிகளில் காலியாகும் இடங்கள் உபரியாக இருந்தாலும் பணி நியமனம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் இடமாற்றம் செய்யலாம், என்றார்.
|
Posted: 16 Aug 2015 07:49 PM PDT
"சாட்டை' படத்தை பார்த்தால் அரசு பள்ளிகள் ஒரு வித "கிலி'யை ஏற்படுத்துகின்றன. ஆனால், அரசு பள்ளிகளிலும் கடமையை தவறாமல் செய்யும் ஆசிரியர்கள் உள்ளனர் என்பதற்கு, ஆசிரியை சசிகலா தேவி ஒரு எடுத்துக்காட்டு.
இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு செல்வதோடு, தன் துறையில் சிறந்த தேர்ச்சி விகிதத்தையும் தக்க வைத்து, அசத்தலான சாதனை படைத்து வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை சேர்ந்த இவர் 2004ம் ஆண்டு முதல் வேளச்சேரி அரசு மேல்நிலை பள்ளியில் விலங்கியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தினமும் காலை 7:45 முதல் 8:00 மணிக்குள் பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதுகுறித்து இவர் கூறியதாவது:நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே விடுப்பு எடுப்பது என்பது அரிதுதான். இதை ஒரு சாதனையாக நான் எப்போதும் கருதியது கிடையாது. கடமையாகவே நினைக்கிறேன். அதிலும், அரசு பள்ளி ஆசிரியை என்பதால் கூடுதல் பொறுப்பு உள்ளதாக நினைக்கிறேன். தினமும் அதிகாலை 5:00 மணிக்கே எனக்கு நாள் பணி துவங்கிவிடும்.காய்ச்சல் வந்தபோது, விபத்து நேரிட்ட போது கூட பள்ளிக்கு வந்து விட்டேன். உறவினர்களின் சுப நிகழ்ச்சிகள் விடுமுறை நாட்களில் வந்தால் மட்டுமே நான் கலந்து கொள்வேன். மற்ற நாட்களில் எனக்கு பதில் கணவர் செல்வார். என் பணிக் காலத்தில் இதுவரை 20 நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்துள்ளேன்.
நான் மட்டும் இல்லை. என் மகன் அரவிந்தன், மகள் அபர்ணா ஆகியோரும் பெரும்பாலும் விடுப்பு எடுப்பதுஇல்லை. நான் எடுக்கும் பாடப்பிரிவில் அனைத்து மாணவ, மாணவியரும் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்பது மட்டும்தான் குறிக்கோள். பெரும்பாலான ஆண்டுகளில், 100 சதவீத தேர்ச்சி கொடுத்துள்ளேன். மீதமுள்ள ஒன்பது ஆண்டுகள் விடுப்பு எடுக்காமல் பள்ளி சென்று மாணவ, மாணவியர்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்பது தான் என் லட்சியம்.இவ்வாறு ஆசிரியை சசிகலாதேவி உற்சாகத்துடன் கூறினார்.
|
Posted: 16 Aug 2015 07:44 PM PDT
மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகையை, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த, 'நேரடி கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்' மத்திய அரசால், துவங்கப்பட்டுள்ளது.இதற்காக,http://scholarships.gov.in/ என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது
.
கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்கள், தங்களுடைய விவரங்களை, இதில் பதிவு செய்து கொள்ளலாம்.இந்த இணைய வசதியை, மாணவர்களுக்கு தெரியப்படுத்த, இணையதள முகவரி மற்றும் கல்வி உதவித் தொகை குறித்த முழு விவரங்களை, கல்லுாரி
மற்றும் பல்கலை இணையதளத்தில் வெளியிட, யு.ஜி.சி., உத்தரவிட்டுஉள்ளது.
|
Posted: 16 Aug 2015 07:43 PM PDT
எட்டாவது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வுக்கட்டுரைக்கான மையப் பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் சுந்தர் கூறியதாவது:கணிதம் மற்றும் அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய கற்றல் முறைகளையும், அறிவியல் கல்விக்கான புதிய ஆலோசனைகளை வெளிப்படுத்தவும், பகிர்ந்து கொள்ளவுமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கடந்த 2003 முதல் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு ஆகிய அமைப்புக்களால் தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த நிகழ்வை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறது. இந்த ஆண்டிற்கான மையப் பொருளாக 'செயல்பாடுகளின் மூலம் அறிவியல் கற்றல்,' என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. துணைப் கருப்பொருள்களாக செலவில்லாத மற்றும் புதுமையான கற்றல் கற்பித்தல் கருவிகள், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை பள்ளிகளில் இருந்து சமூகத்திற்கு கொண்டு செல்வதில் எதிர்கொள்ளும் சவால்கள், சுயசார்பிற்கான அறிவியல், புதுமையான மதிப்பீட்டு உத்திகள், புதுமையான அறிவியல் தொழில்கல்வி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கும் போட்டியில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், அறிவியல் இயக்க நிர்வாகிகள், ஆசிரிய பயிற்றுனர்கள்,
விஞ்ஞானிகள் பங்கேற்கலாம்.
ஆய்வுச்சுருக்கம் மற்றும் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி செப்டம்பர் 5, ஆய்வுக் கட்டுரைகள் முடிவுகள் செப்டம்பர் 15 ல் வெளியிடப்படும். தேசிய அளவிலான மாநாடு டிசம்பரில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும்.ஆய்வுக்கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
A.P.Deshpande, NationalConvenor, 8 th NTSC, c/o Marathi Vidnyan Parishad, Vidnyan Bhavan, V.N. Purav Marg, Sion-Chunabhatti (E), MUMBAI 400 022 E.mail : mvp@8thntsc.org indub.puri@nic.in
|
Posted: 16 Aug 2015 07:43 PM PDT
இடமாறுதல் கலந்தாய்வு மூலம், 1,230 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, புதிதாக தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில், 50 மாவட்ட கல்வி அதிகாரிகள், பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, 8ம் தேதி துவங்கியது. தொடக்கப்பள்ளி இயக்குனரகம் தனியாகவும், உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை கண்காணிக்கும், பள்ளிக்கல்வி இயக்குனரகம் தனியாகவும், கலந்தாய்வை நடத்தி வருகின்றன.
ஒரு வாரமாக தொடரும் கலந்தாய்வில், மேல்நிலைப் பள்ளிகளில், 430 பேர் பதவி உயர்வு மூலமும், 800 தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் மூலமும், 1,230 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுதவிர, பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கு, 360 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு, பதவி உயர்வு பட்டியலில், ஒன்று முதல், 450 பேர் வரையில் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
இதேபோல், 50 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கும், பட்டியல் தயார் செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அதேநேரம், தொடக்க கல்வியில், 45 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் பணிகளில், 20 இடங்களே நிரம்பின; இன்னும், 25 இடங்கள் நிரப்பப்படவில்லை. இந்த இடங்களிலும், புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
|
Posted: 16 Aug 2015 07:42 PM PDT
மத்திய அரசு கல்வி திட்டங்களின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்குவதில், தொடர்ந்து சிக்கல் காணப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், அரசு ஆணை பிறப்பித்த பின், ஊதியம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு நிதி:மத்திய அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றை, தமிழக பள்ளிக்கல்வித் துறை வழியே செயல்படுத்த, மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஆசிரியர் பணியிடங்கள்உருவாக்கப்பட்டு, தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வி சார்பில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளும், இந்த திட்டங்களின் கீழ் கொண்டு வரப்பட்டு, அதன் ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு திட்டத்தின் கீழ், ஊதியம் வழங்கப்படுகிறது.
அரசாணை:ஆனால், அந்த பணியிடங்கள் நிரந்தரமாக்கப்படாமல், ஒரு மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை, அவ்வப்போது புதுப்பிக்கப்படும் வகையில் உள்ளன. எனவே, ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும், தனியாக அரசாணை பிறப்பித்த பின், கருவூலத்தில் இருந்து ஊதியம் வழங்கப்படுகிறது.இந்த அரசாணையை பிறப்பிக்க, ஒவ்வொரு மாதமும் காலதாமதம் ஏற்படுவதால், ஊதியம் வழங்குவதும் தாமதமாகிறது.
தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில், ஒரு குறிப்பிட்ட பிரிவு ஆசிரியர்களுக்கு, கடந்த மாத ஊதியம், நிறுத்திவைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.தமிழ்நாடு ஆசிரியர்முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் கூறுகையில், ''மாதம் துவங்கும் முன், உரிய முறையில் ஆணை பிறப்பிக்காமல் காலம் தாழ்த்துகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண, அரசு முன்வர வேண்டும்,'' என்றார்.
|
Posted: 16 Aug 2015 07:41 PM PDT
தமிழகம் முழுவதும், சத்துணவு மையங்களுக்கு, டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்களே நேரடியாக முட்டை வினியோகம் செய்யும் திட்டம், இந்த வாரம் முதல் அமலுக்கு வருகிறது. எடை குறைவாக இருந்தாலோ, புல்லட் முட்டையாக இருந்தாலோ, அவற்றை திருப்பி கொடுத்து விட வேண்டும். அவ்வாறான முட்டைகள், பள்ளியில் வழங்கப்பட்டால் அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில், 41 ஆயிரம் சத்துணவு மையங்கள் உள்ளன. 1.27 லட்சம் பணியாளர் இருக்க வேண்டிய நிலையில், 30 ஆயிரம் காலிப்பணியிடம் போக, 97 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த, 55 லட்சம் மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர். தற்போது கலவை சாதத்துடன் தினசரி முட்டை வழங்கப்பட்டு வருகிறது.
முட்டை கொள்முதலை பொறுத்தமட்டில், சென்னையில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் மாநில அளவிலான டெண்டர் விடப்படுகிறது. இதில், பல்வேறு மாவட்ட கோழிப் பண்ணையாளர்களும் பங்கேற்பர். மாவட்ட வாரியாக டெண்டர் எடுத்தோர், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், அந்தந்த ஒன்றிய அலுவலகத்துக்கு முட்டையை அனுப்பி விட வேண்டும். அமைப்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒன்றிய அலுவலகம் சென்று, முட்டையை வாங்கிக்கொண்டு மையத்துக்கு செல்ல வேண்டும். சத்துணவு முட்டையானது, தலா, 46 முதல், 52 கிராம் வரை இருக்க வேண்டும். 12 முட்டைகளை ஒரே சமயத்தில் எடை போட்டால், 552 கிராம் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்நிலையில், சத்துணவு முட்டையில் பல்வேறு ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அரசு மீது எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனால், முட்டை வினியோகத்தை நேரடியாக பண்ணையாளர்களே செய்வதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இந்த வாரம் முதல் இம்முறை அமலுக்கு வருகிறது.
முட்டை வாங்கும்போது, அதன் எடை சரியாக உள்ளதா, சிறிய அளவிலான முட்டை உள்ளதா? என்பதை கவனித்து வாங்கினால்
போதும். முட்டையில் குறைபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட பி.டி.ஓ.,விடம் தெரிவிக்கலாம். இதுகுறித்து, சத்துணவு பிரிவு அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘’பள்ளிகளுக்கு நேரடியாக முட்டை சப்ளை செய்யும் திட்டம் இந்த வாரம் அமல்படுத்தப்படுகிறது. ஒரு முட்டைக்கு, 15 காசு வீதம் போக்குவரத்து கட்டணத்தை அரசு வழங்குகிறது. அமைப்பாளர்களுக்கு இது பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும். சிவில் சப்ளைஸ் எவ்வாறு பொருள் வழங்குகின்றனரோ அதுபோல், முட்டை இனி சத்துணவு மையத்துக்கு வந்து சேரும். அவை சரியான எடையில் உள்ளதா, சிறிய முட்டையாக உள்ளதா? என்பதை பார்த்து வாங்க வேண்டும். தவறுதலாக வரும் பட்சத்தில் பி.டி.ஓ.,விடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்கு முன், பி.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து வாங்கி வரும்போது, முட்டை சேதமாகும் நிலை ஏற்பட்டது. இதனால் அமைப்பாளர்கள் அவித்த முட்டைக்கு பதிலாக ஆம்லெட் போடவேண்டிய நிலை இருந்தது. இனி, அந்த நிலை இருக்காது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1523 மையங்களுக்கும் இவ்வாறு நேரடியாக முட்டை சப்ளை செய்யப்படும்’’ என்றார். |
Posted: 16 Aug 2015 07:40 PM PDT
பணப்பலன் காரணமாக தமிழகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்களை பதவி இறக்கம் செய்ய வேண்டுமென, தொடக்கக் கல்வித்துறையில் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் பணிபுரியும் தொடக்கப்பள்ளி
தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.4,500 ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தரஊதியம் ரூ.4,600 ம், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு ரூ.4,700 ம் வழங்கப்படுகிறது.
ஊதிய முரண்பாட்டை களைய 2011 ல் அமைக்கப்பட்ட ஒருநபர் குழு 2009 மே 31 க்குள் 10 ஆண்டுகள் பணிபுரிந்து தேர்வுநிலை பெற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான தர ஊதியத்தை ரூ.5,400 ஆக உயர்த்தியது. இந்த தர ஊதியம் நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் தர ஊதியத்தை விட அதிகமாக உள்ளது.
இதனால் 2009 மே 31 முன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற 100க்கும் மேற்பட்டோர், தங்களை தொடக்கப் பள்ளி தலைமைஆசிரியர்களாக பதவி இறக்கம் செய்ய வேண்டுமென, தொடக்கக் கல்வித்துறையில் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களை பதவி இறக்கம் செய்ய தொடக்கக் கல்வித்துறை மறுத்துள்ளது
|
17 August 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment